கூவம், அடையாறு நதிகள் மற்றும் பங்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகளுக்கு 5439.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூவம் நதியில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், அடுத்த கட்டத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களையும் கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களையும் 5439.76 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளில் சமூகப் பங்களிப்புடன் சீர்குலைந்த காடுகளை மீட்டெடுப்பதற்கான திட்டத்தை 2029.13 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த நபார்டு நிதியுதவிக்காக மாநில செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டை காட்டிலும் 83.02 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு தமிழ்நாட்டின் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளதாகவும், புலிகளின் வாழ்விடங்களை பேணுவதில் மாநில அரசு கொண்ட முயற்சியால் 229 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 264 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.