தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எட்டு புள்ளி ஒன்று சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக உள்ளது. அரசின் கடன் சுமை 42 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி எட்டு புள்ளி ஒன்று சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அரசின் வருவாய் 14 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை துறையின் பங்கு மட்டும் 51 புள்ளி 86 சதவிகிதமாக இருக்கிறது. ஊரக வளர்ச்சித்துறைக்கு 18 ஆயிரத்து 273 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 757 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்திற்கு இரண்டாயிரத்து 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி வங்கி உதவியுடன் 12 ஆயிரம் புதிய பேருந்துகளும், இரண்டாயிரம் பேட்டரி பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன. 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பயிர்க்கடன் வழங்க அரசு உத்தேசித்து இருப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.