பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சன் தொலைக்காட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல் மூலம் 700க்கும் மேற்பட்ட அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், விலக்கு அளிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோரிக்கை மனுவை நிராகரித்தார். இன்று நடைபெறும் விசாரணைக்கு மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.