மாறன் சகோதரர்களுக்கு எதிராக சாட்டை விளாசிய நீதிமன்றம் – குற்றச்சாட்டை பதிய முகாந்திரம் உள்ளது என உறுதி

 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, புதிதாக குற்றச்சாட்டை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சன் தொலைக்காட்சிக்கு சென்னை பிஎஸ்என்எல்-ன் அதிவேக தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைக்கேடாக வழங்கியதாகவும், இதனால் அரசுக்கு சுமார் ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிராக, ஆகஸ்ட் 30 ஆம் தேதி, சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்ய கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், வேதகிரி கௌதமன், கண்ணன், ரவி உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தீர்ப்பினை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்தநிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய அவர், மாறன் சகோதரர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதை சுட்டிக் காட்டினார். எனவே, தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் புதிதாக சிபிஜ குற்றச்சாட்டினை பதிவு செய்ய வேண்டும் என்றும், ஏழு பேரும் வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

 

Exit mobile version