சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு எதிரான சாட்சிய விசாரணை சிபிஐ நீதிமன்றம் நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஜனவரி 30ஆம் தேதி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கூட்டுசதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் 16வது சாட்சியான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் செல்வம் ஆஜராகி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தார். செல்வத்திடம் விசாரணை முடிவடையாத நிலையில், விசாரணையை இன்று ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.