திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, காவல்துறையினரை போல் வேடமணிந்து, அக்காவிற்கு மிரட்டல் விடுத்த தம்பியை, பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வெங்கடாசலபுரத்தை சேர்ந்த வெண்ணிலா திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார்.
வெண்ணிலாவின் தந்தை ஏற்கனவே காலமாகி விட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்த பூர்விக சொத்து பத்திரங்களை கேட்டு அவரது தம்பி ராம ஜெயம் என்பவர் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். வெண்ணிலா பத்திர விஷயத்தில் விடாப்பிடியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தம்பி ராமஜெயம், தனது மூளையை கசக்கி ஒரு திட்டம் தீட்டினார். பரோட்டா மாஸ்டரான அவர், காவலர் உடை, கூலிங் கிளாஸ், இன்ன பிற மேக்கப் சாதனங்களை நாடக கம்பெனி ஒன்றில் இருந்து வாடகைக்கு எடுத்து அணிந்து கொண்டு, அக்காவை மிரட்ட ஆக்ரோஷமாக சென்றுள்ளார்.
ஆனால், ஏழு வயது குழந்தை கூட எளிதில் கண்டுபிடித்து விடும் அளவுக்கு, அவரது உடையும், பெர்ஃபாமென்ஸும் இருந்ததால் வெண்ணிலா வீட்டில் அவரது நாடகம் ஃபிலாப் ஆனது.
தனது ராஜ ரந்திரங்கள் அனைத்தும் வீணான ஆத்திரத்தில் அக்கா வீட்டில் அமர்ந்து ரகளை செய்ய தொடங்கினார் துறையூர் நடிகர் திலகம். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், காவல் உடையோடு இருந்த அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.