பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கும் நேற்றுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கட்சி, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி உள்ளிட்டவற்றின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்ததுமே இரவோடு இரவாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 361 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தொழிலாளர் கட்சி 203 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி நாற்பதுக்கு மேற்பட்ட இடங்களிலும், லிபரல் ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய – பிரிட்டன் உறவை மேலும் நெருக்கமாக முன்னெடுத்துச் செல்ல, ஒன்றாக இணைந்து பாடுபடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version