ஏழு மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல் நிறைவுபெற்ற நிலையில், 5வது கட்டமாக உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஜம்மு- காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் எட்டு புள்ளி 75 கோடி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகின்றனர்.
இதற்காக நாடு முழுவதும் 96 ஆயிரத்து 88 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய தலைவர்கள் பலரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தின் 3 வாக்குசாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை 9 மணி வரை வாக்குப்பதிவு துவங்கவில்லை. பிற இடங்களில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
பகல் 1 மணி நிலவரம்
7 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 31.29% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 39.55% வாக்குகளும் குறைந்த பட்சமாக ஜம்மு காஷ்மீரில் 6.54% வாக்குகளும் பதிவாகியுள்ளன. உத்திரப் பிரதேசத்தில் 26.53% வாக்குகளும், பீகாரில் 24.49% வாக்குகளும் ராஜஸ்தானில் 33.82% வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 31.46% வாக்குகளும் ஜார்கண்டில் 37.24% வாக்குகளும் பதிவாகி உள்ளன.