ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, சர்வதேச அளவில் இதுவரை கைப்பற்றிய பதக்கங்களை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்…
சென்னையில் பிறந்த வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி, குழந்தைப் பருவம் முதலே வாள் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2009ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் தடம் பதித்த அவர், 2009-ல் மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். 2010ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 2012ஆம் ஆண்டு ஜெர்ஸியில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் என இரு பதக்கங்களை வெவ்வேறு பிரிவுகளில் வென்றார்.
2014 பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் வெள்ளிப்பதகத்தை தன்வசப் படுத்தினார். ஆசிய வாள் சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அடைந்தார் பவானி தேவி. அப்போது, இவரது தொடர் வெற்றிகளைக் கண்ட மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா, அவரை அழைத்து தமிழகத்திற்கு மென்மேலும் பெருமையை சேர்க்க வாழ்த்தி, நிதியுதவியும் அளித்தார்.
அடுத்த ஆண்டே மங்கோலியாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கங்கத்தை வென்று தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் நமது தேசத்திற்கே பெருமையை தேடித் தந்தார், பவானி. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நடைபெற்ற TOURNOI SATELLITE போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தினார்.
வெள்ளியும் வெண்கலமுமே, வென்று வந்த பவானி தேவிக்கு 2018ஆம் ஆண்டு திருப்புமுனையாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள் சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையை படைத்தார். ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனையும் இவரே. தற்போது உலக தரவரிசைப் பட்டியலில் 42ஆம் இடத்தில் உள்ளளார் பவானி தேவி.
இவரது கடுமையான உழைப்பும், நம்பிக்கையும் ஒலிம்பிக் வரை கொண்டு வந்துள்ளது. இந்த நிலையை அடைய, தான் அதிக சவால்களை சந்தித்ததாகவும், டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சம் பதக்கத்துடன் நாடு திரும்புவேன என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார், பவானி தேவி.