மத்திய அரசின் கட்டுமானங்களில் செங்கற்களைப் பயன்படுத்தவதற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
களிமண் மற்றும் செம்மண் மூலம் தயாரிக்கப்படும் செங்கற்கள், செங்கற்சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாக கருதுவதால் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. வீணாகும் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கற்களை உருவாக்கும் நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன என்றும், இதன் மூலம் உருவாக்கப்படும் செங்கற்களைக் கொண்டு கட்டிடம் கட்டலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய பொதுப்பணி துறைக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ள மத்திய கட்டுமானம் மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம், செங்கற்களைக் கொண்டு கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக விரிவான ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்லை கட்டுமானப் பயன்பாட்டுக்கு தடை செய்வதன் மூலம் ஏற்படும் சாதக பாதகங்களை வரும் 11 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டுமானம் மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.