ஈரோட்டில் கொரோனோவால் உயிரிழந்த முன்களப் பணியாளரின் தந்தை உடலை ஒப்படைக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு இரண்டு நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. மரணத்திலும் சம்பாதிக்க நினைக்கும் மனசாட்சி மரித்துப்போன இந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.
ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் பழனிசாமி. இவரது மகன் மணிகண்டன் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தை பழனிசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கோவிட் கேர் சென்டரில் அனுமதிக்கப்ட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். அவரது உடலை ஒப்படைக்க 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்கப்பட்டதால், மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார்.
தந்தையின் உடல் அடக்கத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த மணிகண்டனிடம், ஒவ்வொரு இடமாகச் சென்று அனுமதி கடிதம் வாங்கி வரும்படி அலைக்கழித்துள்ளனர். தந்தையின் மரணம் ஏற்படுத்திய மனபாரத்துடன், அதிகாரிகளின் அலைக்கழிப்பையும் பொறுத்துக் கொண்டு அனைத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார் மணிகண்டன். திடீரென அமரர் ஊர்தி இல்லை என்று கூறிய கோவிட் கேர் மைய அதிகாரிகள், ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று மேலும் அலைக்கழித்துள்ளனர்.
கோவிட் கேர் மையத்தில் உள்ள மருத்துவர் ஒருவர், தனியார் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்தார். அங்கும் பணம்தான் பிரதானமாக இருந்தது. தந்தையின் உடலை நெகிழியில் கட்டுவதற்கு ஆம்புலஸ் ஓட்டுநர் எட்டாயிரம் ரூபாய் கேட்டதாகவும், சடலத்தை ஏற்றிச் செல்ல 7ஆயிரத்து 500 கேட்டதாகவும் கனத்த குரலில் கூறுகிறார் மணிகண்டன். உடலை தகனம் செய்யும் ஆத்மா நிறுவனம் தனது பங்குக்கு 9 ஆயிரம் ரூபாய் கேட்க விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டார் மணிகண்டன்.
சடலத்தை முறைப்படி உரிய நேரத்தில் கோவிட் கேர் சென்டரிலிருந்து, நேரடியாக ஒப்படைத்தால் ஒரு கூலித் தொழிலாளிக்கு இவ்வளவு சிரமங்கள் நேர்த்திருக்காது. கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்காமல், அதை வைத்து பணம் பறிக்கும் அவல நிலையைத் தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.