திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவம் விழா, நாளை தொடங்கி அடுத்த மாதம் 8ந் தேதி வரை விமர்சையாக நடைபெற இருக்கிறது.
பிரம்மோற்சவ விழா முன்னிட்டு இன்று மாலை ஏழு மணியளவில் சேனாதிபதி உற்சவம் மற்றும் அங்குரார்ப் பணை நடக்கவுள்ளது. பின்னர், 30ந் தேதி பிரம்மோற்சவம் விழா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் முதலாவது நாளான நாளை மாலை கோவிலுக்குள் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, அன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் அமர்ந்து திருமாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளனர். 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், சிம்ம வாகன சேவை, முத்துப்பந்தல் வாகன சேவை, கற்பக விருட்ச வாகன சேவை, சர்வ பூபால வாகன சேவை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதனிடையே, பிரம்மோற்சவ விழாவை காண வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை கவர, திருமலை பாப விநாசனம் சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் தேவஸ்தான தோட்டத்துறை ஊழியர்கள் மலர் கண்காட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட வண்ண மலர்களுடன் 40 ஆயிரம் பூச்செடிகள் கொண்டு மலர்க்கண்காட்சி அமைத்து வருகின்றனர். கண்காட்சியில், அத்திவரதர் மாதிரி சிலையை வடிவமைக்கும் பணியில் தேவஸ்தான நிபுணர்கள் குழு ஈடுபட்டு வருகிறது.