திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவு பிரம்மோற்சவத்தின் முதல் வாகனமான ஏழு தலைகள் கொண்ட நாகம் வடிவிலான பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக உற்சவர், மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இரண்டாம் நாளான இன்று காலை, ஐந்து தலைகள் கொண்ட நாகம் வடிவிலான சிறிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. அதில் மலையப்ப சுவாமி, யோக நாராயணர் அவதாரத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள், நாலாயிர திவ்ய பிரபந்த முழக்கங்களுக்கு இடையே யானைகள், குதிரைகள், காளைகள் ஆகியவை முன்செல்லக் கோலாகலமாக சிறிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. ஏழுமலையானின் சின்ன சேஷ வாகன சேவையை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
பங்கேற்று தரிசனம் செய்தனர்.