இந்தியா – சீனா இடையே எல்லைத் தகராறு தொடர்பாக இறுதித் தீர்வை எட்டுமுன், எல்லைப்பகுதியில் இருநாடுகளும் இணைந்து அமைதியைப் பராமரிக்க வேண்டும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் சி ஜின்பிங் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்த உள்ளார். இந்நிலையில் டெல்லியில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் செய்தியாளரிடம் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே தீர்க்கப்படாமல் உள்ள எல்லைப் பிரச்சனையில் இறுதித் தீர்வு எட்டப்படுமா எனச் செய்தியாளர் வினவினார். அதற்குப் பதிலளித்த அவர், எல்லைத் தகராறில் இறுதித் தீர்வை எட்டுமுன், எல்லையில் இருநாடுகளும் கூட்டாக இணைந்து அமைதியைப் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்தியா – சீனா இடையே வணிகப் பற்றாக்குறை வளர்ந்து வருவது குறித்துச் செய்தியாளர் கேட்டதற்கு, சீனா எப்போதும் வணிக உபரி வைத்திருக்கவில்லை என்றும், இருநாடுகளின் தொழில்துறைக் கட்டமைப்புகளில் உள்ள வேறுபாடே வணிகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்குக் காரணமாகும் எனவும் சீனத் தூதர் குறிப்பிட்டார்.