சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேற்கு டெல்லியில் இருந்து ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்ற நபர் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், தான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தை சேர்ந்தவன் எனவும், செப்டம்பர் மாதம் 30-ம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்க செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்றம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்களின் வாகனங்கள் முழு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணைக்காக வரும் பொதுமக்களும் உரிய ஆவணங்களை காண்பித்த பின்னரே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.