அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து!!- நெய்வேலியில் பரபரப்பு

நெய்வேலி என்எல்சியில் உள்ள, இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சியில், இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று விபத்து ஏற்பட்டது. 5-வது அலகில் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படும் போது பணியில் 24 பேர் இருந்த நிலையில், 2 பேரை தேடி வருகின்றனர்.

நெய்வேலி அனல் மின்நிலைய விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தீ விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாகவம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version