விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் திட்டத்தின் சோதனை முயற்சியாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா விண்ணில் செலுத்தி உள்ளது.
பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று வருவதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, ஸ்பேஸ் எக்ஸ், போயிங் ஆகிய இரு நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துள்ளது. இந்நிலையில் போயிங் நிறுவனத்துடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி போயிங் ஸ்டார்லைனர் என்கிற ஆளில்லா விண்கலத்தை அட்லஸ் 5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி உள்ளது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று வெற்றிகரமாகப் புவிக்குத் திரும்பினால், அடுத்த முறை இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப் கேனவரல் விமானப்படைத் தளத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. இந்திய நேரப்படி வெள்ளி மாலை 5 மணி 6 நிமிடங்களுக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் விண்வெளிச் சுற்றுலா சென்று வருவது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவின் போயிங் ஸ்டார்லைனர் சோதனை முயற்சி வெற்றிபெற்றால் விண்வெளிச் சுற்றுலாவுக்கான கட்டணம் குறையும் என்பதுடன், அதில் கிடைக்கும் வருமானத்தில் நாசா, போயிங், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பயனடையும்.