அமெரிக்காவில் போயிங் 737 ரக விமானம் ஆற்றில் இறங்கியது

அமெரிக்காவில் போயிங் 737 ரக விமானம் ஆற்றில் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 6 மாதங்களில் 3 பெரிய விபத்துகளைச் சந்தித்து, 300க்கும் மேற்பட்டவர்களின் இறப்புக்குக் காரணமாகி உள்ளது பயணிகள் விமானமான ‘போயிங் 737’. அதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்…

2018 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 189 பேரும் இறந்தனர். இது, உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ரக விமானங்களின் என்ஜின்கள் மற்ற விமானங்களில் உள்ள என்ஜின்களைவிட எடை அதிகமாக உள்ளதால் வானத்தில் உயர கிளம்பி விமானத்தை நிலைநிறுத்தும்போது சமநிலை இல்லாத தடுமாற்றத்தால், இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை போயிங் தயாரிப்பு நிறுவனம் மறுத்தது.

கடந்த மார்ச் மாதத்தில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

5 மாத இடைவெளியில் போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் விபத்தை சந்தித்ததால் பிரிட்டன், சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பலநாடுகள் இந்த ரக விமானங்களுக்குத் தடை விதித்தன.

49 புதிய போயிங் விமானங்களை வாங்க இருந்த முடிவை இந்தோனேசியா கைவிட்டது. ஆனால் அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து அழுத்தம் வந்தபோதும், அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமான எஃப்.ஏ.ஏ. ‘தடை விதிக்க உரிய காரணமில்லை’ என்று கூறி, போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் பறப்பதற்கு தடை விதிக்காமல் இருந்தது. அமெரிக்காவில் மொத்தம் 74 போயிங் 737 ரக விமானங்கள் பயன்பாட்டில் இருந்தன.

இந்நிலையில் கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த போயிங் 737 ரக விமானம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், இதுவரை போயிங் விமானங்களைப் பயன்படுத்திவந்த அமெரிக்காவும் அதற்குத் தடைகளை விதிக்க இந்த விபத்து தூண்டுதலாக இருக்கும்.

Exit mobile version