போயிங் 737 மேக்ஸ் ரக விமான உற்பத்தி நிறுத்தம்

பயணிகள் விமானமான போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் உற்பத்தியை நிறுத்துவதாக விமான தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. சுமார் 6 மாதங்களில் 3 விபத்துகளை போயிங் 737 விமானம் சந்தித்ததே இதற்கு காரணமாக உள்ளது.

2018ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737  மேக்ஸ் ரக விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 189 பேரும் இறந்தனர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.
 
வெறும் 5 மாத இடைவெளியில் போயிங் 737 மேக்ஸ் 8  ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் விபத்தை சந்தித்ததால் பிரிட்டன், சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பலநாடுகள் இந்த ரக விமானங்களுக்குத் தடை விதித்தன. 49 புதிய போயிங் விமானங்களை
வாங்க இருந்த முடிவை இந்தோனேசியா கைவிட்டது.
 
இந்த ரக விமானங்களின் என்ஜின்கள் மற்ற விமானங்களில் உள்ள என்ஜின்களைவிட எடை அதிகமாக உள்ளதால் வானத்தில் உயர கிளம்பி விமானத்தை நிலைநிறுத்தும்போது சமநிலை இல்லாத தடுமாற்றத்தால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை
போயிங் தயாரிப்பு நிறுவனம் மறுத்தது.
 
அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து அழுத்தம் வந்தபோதும், அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமான எஃப்.ஏ.ஏ. ’தடை விதிக்க உரிய காரணமில்லை’ – என்று கூறி, இந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் பறப்பதற்கு தடை விதிக்காமல்
இருந்தது. அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 74 போயிங் 737 ரக விமானங்கள் பயன்பாட்டில் இருந்தன.
 
இந்நிலையில்தான் கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், அதுவரை போயிங் விமானங்களைப்
பயன்படுத்திவந்த அமெரிக்காவும் அதற்குத் தடைகளை விதிக்க இந்த விபத்து தூண்டுதலாக இருந்தது.
 
அமெரிக்காவில் போயிங் 737 ரக விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது இந்த ஆண்டுக்குள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டுக்கு முன்னதாக அந்தத் தடையை நீக்க முடியாது என அமெரிக்கப் போக்குவரத்துக் கழகம்
தெரிவித்து உள்ளது. இதனால் போயிங் 737 ரக விமானங்களின் உற்பத்தியை நிறுத்துவதாக விமான தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் போயிங் விமானங்கள் சேவைக்குத் திரும்புமா? அவற்றில் மக்கள் நம்பி
ஏறுவார்களா? – என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Exit mobile version