மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுடன் மல்லுக் கட்ட 800 மாடுபிடி வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் வரும் ஜனவரி மாதம் 15, 16, 17 ஆகிய தேதிகள் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த மாடுபிடி வீரர்கள் உடல் சோதனையில் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்களுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு, எடை, வயது, உயரம் மற்றும் உடல் சோதனை செய்யப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர், மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்தனர். இதில் தேர்வான 800 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. எனினும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று மீண்டும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, ஜல்லிக்கட்டு களத்திற்குள் மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.