கானா பாடும் இளைஞர்களின் ரோல் மாடல் நாயகன் பாப் மார்லி

உலகப்புகழ் பெற்ற மேற்கத்திய பாடகர் பாப் மார்லி பிறந்த தினம் இன்று, அவரை பற்றி விளக்குகின்றது இந்தத் செய்தி தொகுப்பு…

கானா பாடும் இளைஞர்களின் டீ-ஷர்ட்களில், கீசெயின்களில், ஆட்டோக்களின் பின்னால் எனப் பல இடங்களில் அந்த முகத்தை பார்த்திருப்போம். சுருளான தலைமுடி, பாசாங்கற்ற புன்னகை அந்த முகத்துக்குச் சொந்தக்காரர்தான் பாப் மார்லி.

கஞ்சா புகைப்பவன், ஒரு வரம்பற்று பாடித் திரிபவன் என இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், இந்த நூற்றாண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட கலைஞன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஜமைக்காவைச் சேர்ந்த ஓர் இளைஞனை உலகம் முழுவதும் சேர்ந்த இளைஞர்கள் கொண்டாடுவதற்குக் காரணம், பாப் மார்லி வெறும் இசைக்கலைஞன் மட்டுமல்ல. இசையின் வழியே மனிதத்தைப் பரப்பியகலைஞன். ஜமைக்காவில் பெரும்பகையாளர்களாக மல்லுக்கட்டிக்கொண்டிருந்த இரண்டு அரசியல் கட்சிகளை, ஒரே மேடையில் கைகோர்த்தபடி நிற்கவைத்து `ஒரே அன்புதான், ஒரே இதயம்தான். என  அவர் பாடியது ஜமைக்காவின் சரித்திரப்  பக்கங்களில் அன்பை பரப்பியது.  பாப் மார்லி  மைக்கைப் பிடித்துப் பாடிய பாடல் ஜமைக்காவுக்கானது மட்டுமல்ல, அன்பின் நிராகரிப்பில் உள்ள பல கோடி இதயங்களுக்கானது.

இசையின்மிகப் பெரும்தத்துவமே, அது உங்களைத் தாக்கும்போது நீங்கள் உங்கள் வலியை மறப்பீர்கள்’ – பாப் மார்லியின் புகழ்பெற்ற வாசகம் இது. இசையை மக்களுக்கான வலிநிவாரணியாகவே அவர் பார்த்தார். ஏனென்றால், துயரம் நிரம்பிய வாழ்விலிருந்து அவரை மீட்டெடுத்ததே அந்த `ரெக்கே’ (reggae) வகை இசைதான்.

உலகின் மகத்தான பல கலைஞர்களைப்போலவே மார்லியும் வறுமையோடுதான் இசைத்துறையில்  நுழைந்தார். அவரின் அப்பா நார்வல் சிங்ளேர் மார்லி, ஒரு வெள்ளையினத்தவர். அம்மா செடெல்லா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். தேயிலைத் தோட்டத்தின் மேலாளராகப் பணிபுரிந்த 60 வயதான நார்வல், 18 வயதான செடெல்லாவைத் திருமணம் செய்துகொண்டார். பாப் மார்லி  சிறுவனாக இருந்தபோதே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு தன் ஏழ்மையின் துயரை மறக்க, இசையின் பக்கம் வந்தார். தன் பள்ளி நண்பன் லிவிங்ஸ்டனுடன் இணைந்து பள்ளியில் கிட்டார் வாசிக்க ஆரம்பித்தார். அங்கிருந்துதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இசைக்கலைஞன் உருவாக ஆரம்பித்தான். தன்னைப்போலவே இசைப் பித்து பிடித்த தன் நண்பர்கள் பலருடன் இணைந்து `வெய்லர்ஸ்’ (The Wailers) என்ற இசைக்குழுவைத் தொடங்கினார்.

1960-களில் வெளியான அவருடைய ஆல்பங்கள், அவருக்கு உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. கிட்டாருடன் மேடையேறி எந்தவித ஆர்பாட்டமுமின்றி மார்லி பாடும் பாடலை, பல ரசிகர்களும் தங்களுக்கான கீதமாகக் கொண்டாடினர். காதல் திருமணம் செய்துகொண்ட பாப் மார்லிக்கு, 11 குழந்தைகள். தன் குரலின் வழியே மனிதர்களை மகிழ்வித்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்டடார். தன் இதயத்துடிப்பு மெள்ள மெள்ள தன் செவிகளுக்குக் கேட்காமல் விலகத் தொடங்கிய நாள் ஒன்றில், தன் மகனிடம் கூறிய வார்த்தை  “பணத்தால் ஒருபோதும் வாழ்க்கையை வாங்க முடியாது” என்பதுதான். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள். பெரும்புகழ், பெரும் ரசிகர் கூட்டம் என இருந்தபோதும் `வாழ்வின் ஆதாரம் அன்பு மட்டுமே!’ என்பதைத் தீர்க்கமாக நம்பினார் மார்லி.

ஜமைக்காவின் இசையான `ரெக்கே’ இசையை உலகெங்கும் பரப்பிய பாப் மார்லி, தன் 36-வது வயதில் அவரது இசையை உலகுக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றார். ஒரு மனிதனை நிறம், உடை, தோற்றம் எனப் பிரித்துப் பார்த்து ஒதுக்கிவைக்கும் இந்த உலகுக்கு பாப் மார்லி கூறியது ஒன்றே ஒன்றுதான், `இசை போன்றதுதான் மனிதமும், உருவங்களற்றது; உணரவேண்டியது’.

Exit mobile version