” Black Panther” சாட்விக் போஸ்மேன் : புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்!

மார்வெல் சினிமா உலகத்தின் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களைக் கவர்ந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் காலமானார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கரொலினாவில் பிறந்த போஸ்மேன், திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார். 2013 ஆம் ஆண்டில் ஹாரிசன் ஃபோர்டுடன், அவர் நடித்த 42(forty two) திரைப்படம், ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தது. 42 திரைப்படத்தின் வெற்றி அவருக்கு மார்வெல் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் படத்தில் பிளாக் பேந்தராக நடித்து புகழ்பெற்ற அவரின் துடிப்பான நடிப்பு உலகம் முழுவதும் ஏராளமான ரசிர்களை கட்டிப்போட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீள படத்தை தயாரித்தது மார்வெல் நிறுவனம். வாக்கண்டாவின் அரசராக போஸ்மேன் நடித்த இத்திரைப்படம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டியுள்ளது. ‘ப்ளாக் பேந்தர்’ இயக்குனர் உட்பட பல நடிகர்கள் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் சூப்பர்- ஹீரோ திரைப்படம் பிளாக்பாந்தர். இந்த சூழலில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போஸ்மேன், வெளி உலகிற்கு அறிவிக்காமல் வாழ்ந்து வந்தார். கீமோ தெரபி மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு மத்தியிலும் பல படங்களில் நடித்தார். கடைசியாக ஸ்பைக் லீயின் திரைப்படமான, ’டா 5 பிளட்ஸ்’ திரைப்படத்தில் வியட்நாம் போரில் கறுப்பின வீரர்கள் குழுவின் தலைவராக நடித்திருந்தார். இந்நிலையில் புற்றுநோய் தீவிரமடைந்து அவர் உயிரிழந்ததாக, டிவிட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version