கொரோனாவிலிருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், அவர்களது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவில்லை எனில், கருப்பு பூஞ்சைத் தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
தீவிர கொரோனா பாதிப்புக்காக சிகிச்சைபெற்று உயிர்பிழைத்த நபர்களில் சிலரை, மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சைத் தொற்று பாதித்துள்ளது.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, பூஞ்சைகள் நம்மை தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காற்றில் உள்ள பூஞ்சைத் துகள்களை, எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் சுவாசிக்கும்போது, அவர்கள் உடலுக்குள் புகுந்து, சைனஸ் மற்றும் நுரையீரலை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூக்கிலிருந்து வடியும் திரவமும் கருப்பாக இருப்பதால், இது கருப்பு பூஞ்சை தொற்று என அழைக்கப்படுகிறது.
கருப்பு பூஞ்சையின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக, கன்னம், கண் பகுதிகளில் வலி ஏற்படும். மூக்கு, வாய் பகுதியை முதலில் பாதிக்கும் இத்தொற்று, பாதித்த இடத்தில் உள்ள செல்களை அழித்து, அந்த இடத்தை கருப்பாக மாற்றி விடுகிறது என்கிறார், கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் திரிவேணி
கொரோனா பாதிப்பின்போது, உயிரை காப்பாற்றுவதற்காக அதிக ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் தரப்படுகின்றன.
இதனால், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன் காரணமாக, தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர், இவர்கள் எளிதாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கருப்பு பூஞ்சை தோன்றிய ஓரிரு நாட்களுக்குள்ளேயே மிக வேகமாக பரவி, பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டவை என கூறுகிறார் மருத்துவர் திரிவேணி
குஜராத், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்பு அறிகுறிகளோடு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பூஞ்சைத் தொற்றால் பாதித்து, ஒரு முறை செயலிழந்த நரம்புகளை, மீண்டும் செயல்பட வைக்க முடியாது. இத்தொற்று வந்து விட்டால், உயிரை காப்பாற்றவே சிகிச்சை தரப்படுகிறது.
எனவே பூஞ்சைத் தொற்று அறிகுறிகளாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்த உடனேயே, மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
கொரோனா நோய் நுரையீரலை மட்டுமின்றி, உடலின் பிற பாகங்களையும், குறிப்பாக கண்களையும் பாதிக்கக்கூடும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக, செய்தியாளர் தங்கமணி….