‘மியுகோர்மை கோசிஸ்’ கருப்பு பூஞ்சை தொற்று, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள நபர்களை தாக்கும். கண்களை சுற்றி வலி அல்லது எரிச்சல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், ரத்த வாந்தி ஆகியவை இந்நோய் தொற்றுக்கு முக்கிய அறிகுறிகளாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் கருப்பு பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த நோயால் அந்த மாவட்டங்களில் டஜன் கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த மாவட்டங்களில், கருப்பு பூஞ்சை நோய்க்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களும், நீரிழிவு நோயாளிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில், ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.