2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 17 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாநில பாஜக தலைவர் கோவர்தன் ஜாதாபியா, கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் தயானந்த் கவுதம், மத்தியப்பிரதேச தலைவர் மிஸ்ரா ஆகியோர் உ.பி. மாநில நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் தான் கடந்த முறை பாஜகவுக்கு பெரிதும் கைக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள 80 தொகுதிகளில் 70 ஐ பாஜக வென்றிருந்தது. இம்முறையும் கணிசமான தொகுதிகளை வெல்ல பாஜக காய் நகர்த்தி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரவிசங்கர் பிரசாத்தும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தாவர்சந்த் கெலாட்டும், பீகார் மாநிலத்திற்கு கட்சியின் செயலாளர் புபேந்தர் யாதவும், சத்தீஷ்காருக்கு அனில் ஜெயினும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல ஆந்திரா, குஜராத்,ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உள்பட பிற மாநிலங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.