காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சையதின் புதிய வீடியோவை வெளியிட்டு காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
புல்வாமாவில் தற்கொலை படை தாக்குதல் மூலம் 40 சிஆர்பிஎப் வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரை, மசூத் அசாரை ஜி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக பாஜக குற்றம் சாட்டியது. இதையடுத்து மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சையத்தை ஹபீஸ்ஜி என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்தநிலையில், டுவிட்டர் பக்கத்தில் ஹபீஸ் சையத்தின் வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் பேசும் ஹபீஸ் சையத், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அறிவுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார். எல்லாவற்றிற்கும் பாகிஸ்தானை குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பாஜகவிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பியுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஹபீஸ் சையித் உடனான உறவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.