மக்களவை தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனிபெரும்கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க, பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. இதனையடுத்து பட்ஜெட் தாக்கல் தேதி மாற்றம், 500, ஆயிரம் ரூபாய் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்தநிலையில் விரைவில் மக்களவை தேர்தல் வர இருப்பதால் அதற்கான ஏற்பாட்டு பணிகளில் பா.ஜ.கவும் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர்கள், தேசிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
முதலாம் நாளான இன்று அமித் ஷாவும் நாளை பிரதமர் மோடியும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அப்போது மக்களவை தேர்தல் கூட்டணி உள்ளிட்ட வியூகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.