கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியான பாஜக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தலைநகர் பெங்களூரு, விதான்சவுக் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடக அரசியலில் நீடித்து வரும் குழப்பத்தினால் அரசு இயந்திரம் முடங்கியுள்ளதாகவும், முதலமைச்சர் குமாரசாமி உடனடியாக பதவி விலக வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவையில் சபாநாயகர் ரமேஷ் குமார் அரசியல் சாசன விதிமுறைகளை மீறி தங்கள் ராஜினாமாவை நிராகரித்துள்ளதாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தங்கள் ராஜினாமாவை உடனே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

Exit mobile version