மகாராஷ்டிரத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் காகடே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராகத் தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர். பாஜகவுக்குத் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை எனவும், கட்டுப்பாட்டை மீறியதற்காக அஜித் பவாரைக் கட்சியில் இருந்து நீக்குவதாகவும் சரத்பவார் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை மெய்ப்பிக்க நவம்பர் 30ஆம் தேதி வரை பாஜகவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேவையான பெரும்பான்மையைத் திரட்ட பாஜக தலைவர்கள் பல்வேறு வழிகளிலும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் திடீர்த் திருப்பமாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் காகடே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் காகடே, தனிப்பட்ட காரணங்களுக்காக சரத் பவாரைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே அஜித் பவாருடன் சென்ற 10பேரைத் தவிர்த்து மீதமுள்ள தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேரும் மும்பை போவாயில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.