மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கட்சிக்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் பாரதிய ஜனதா மனு அளித்துள்ளது.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், மகாத்மா காந்தியின் படுகொலையை இந்து தீவிரவாதம் என குறிப்பிட்டார். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியில், வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் கமல் இவ்வாறு பேசியிருப்பது பல்வேறு தலைவர்களின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்தநிலையில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பேசிய கமல் மீது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் 5 நாட்களுக்கு கமல் பிரசாரத்தில் ஈடுபட தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் அவர், கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்திய மக்கள் நீதி மய்யத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசியல் கட்சியினர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வகுத்துள்ள மரபையும் கமல் மீறிவிட்டதாகவும் தனது புகார் மனுவில் அஸ்வினி குமார் உபாத்யாய் சுட்டிக் காட்டியுள்ளார்.