மகாராஷ்டிராவில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசைத் தோற்கடித்துப் புதிய அரசை அமைக்கப் போவதாக, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில், அகமது பட்டேல், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர். பாஜக அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடையச் செய்து, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவற்றுடன் இணைந்து புதிய அரசு அமைக்கப்படும் எனத் தெரிவித்தனர். காங்கிரஸ் விரைந்து முடிவெடுக்காததே பாஜக ஆட்சி அமைவதற்குக் காரணம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர். இதனிடையே, தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கிவிடாமல் தடுப்பதற்காக, 44 பேரையும் வெளிமாநிலத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைக்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.