டிரம்ப்பின் வருகை குறித்து காங்கிரஸ் கருத்திற்கு பாஜக கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகையை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே குறை கூறுவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை இந்தியா வருகிறார். அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி அகமதாபாத் மற்றும் அக்ராவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகை வெறும் புகைப்படமாக இருக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. மேலும் இந்த பயணத்தின் மூமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, அமெரிக்க அதிபரின் வருகையை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே குறை கூறுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் சந்திப்பை வரவேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்துக் கட்சிகளும் ஒரே தேசம் என்ற சிந்தனையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, தாஜ் மஹாலை பார்வையிட செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி செல்ல மாட்டார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது குடும்பத்தினருடன் வசதியாக தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்கும் வகையில் இந்திய உயர்மட்ட தலைவர்கள் உட்பட யாரும் டிரம்ப்புடன் செல்ல மாட்டார்கள் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தாஜ்மஹால் பார்வையிட்ட பிறகு, டெல்லி திரும்பும் டிரம்ப்புடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version