மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரும் பாஜக: ஆளுநரை சந்திக்க திட்டம்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாரதிய ஜனதா கட்சி இன்று உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வென்றது. தேர்தல் வெற்றிப் பிறகு, முதலமைச்சர் பதவிக்கு சிவசேனா கட்சி உரிமை கோரியது. இதனை பாரதிய ஜனதா ஏற்க மறுத்த நிலையில் தேர்தல் கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டது. மேலும், இரு கட்சித் தலைவர்களும் அம்மாநில ஆளுநரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணி பிளவால், தேர்தல் முடிவு வெளியாகி 16 நாட்களாகியும் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படுவோம் எனத் தெரிவித்தார். இதனால் தேசியவாத காங்கிரஸின் ஆதரவை இரு கட்சிகளும் பெற முடியாமல் போனது.

நாளை இரவுடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க இன்று உரிமை கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதாவிற்கு 15 சுயேட்சைகள் ஆதரிப்பதாக கூறப்படுகிறது. ஆயினும் இன்னும் 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுவதால் பதவி ஏற்ற பின் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாரதிய ஜனதா உள்ளது.

Exit mobile version