கர்நாடக மாநிலம் குந்த்கோல் மற்றும் சிஞ்சோலி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அம்மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் சமீப காலமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து 104 எம்.எல்.ஏக்களுடன் தனிபெரும் கட்சியாக திகழும் பாஜக ஆட்சியமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்த காங்கிரசின் சி.எஸ்.வள்ளி இறப்பினால் குந்த்கோல் தொகுதியில் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் அவரது தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி மாநில அரசியலில் மாற்றத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. எனவே, இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற ஆளும் கூட்டணியும், பாரதிய ஜனதாவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.