நாவல் மன்னர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பிறந்த தினம் இன்று – சிறப்பு தொகுப்பு

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று நாவல்களை எழுதி, தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பிறந்த தினம் இன்று. அவரை பற்றிய செய்தி தொகுப்பு …

சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள் என இரண்டு துறையிலும் பயணித்த இலக்கிய ஆளுமைகளில் முதன்மையானவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இயற்பெயரான கிருஷ்ணமூர்த்தி என்பது மறைந்து காலப்போக்கில் கல்கி என்பதே இவருடைய பெயராக வரலாற்றில் நிலைத்தது.

அன்றைய தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த புத்தமங்கலத்தில் 1899ம் ஆண்டு பிறந்த கல்கி, பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுதே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற அவர், சிறையில் இருந்த போது விமலா என்ற பெயரில் தனது முதல் நாவலை எழுதினார்.

வார இதழ் ஒன்றில், அப்போது இவர் எழுதிய பொன்னியின் செல்வன் வெளியாகி வாசகர்களை கட்டிபோட்டது. சோழ வரலாற்றை அடிப்படையாக கொண்ட இந்த நாவல் கல்கியின், மணிகுட படைப்பாகும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நாவல்கள் இன்றும் தமிழ் மக்களை தன் வசம் இழுத்து வைத்திருக்கிறது

எழுத்து வல்லமையோ.. என்னவோ! இவர் எழுதிய பொன்னியின் செல்வன் கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திரைப்படமாக எடுக்க நினைத்தார் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழக வரலாற்றை பின்னோக்கி பார்க்க நினைப்பவர்களுக்கு கல்கியின் நாவல்களும், புதினங்களும் ஒரு வரப்பிரசாதம்தான்.

சொந்தமாக ஒரு பத்திரிகையை தொடங்கிய கல்கி, பெரும் சிரமத்துடன் தனது பயணத்தை தொடர்ந்தார். கல்கியின் படைப்பாற்றலால் விரைவிலேயே மக்கள் செல்வாக்கு பெற்றது அந்த இதழ். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மீரா படத்துக்கு கதை, வசனத்தை எழுதியதுடன், காற்றினிலே வரும் கீதம் உள்ளிட்ட பாடல்களையும் எழுதி தந்தார்.

எழுத்தாளர், விமர்சகர், பாடல் ஆசிரியர், பத்திரிகையாளர் என பன்முகம் காட்டிய கல்கி 1954ம் ஆண்டு தன்னுடைய 55-வது வயதில் மறைந்தார். அவர் இறந்த பிறகு அவரின் அலையோசை நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும், அவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. வரலாற்று கதைகளுக்கு வரி வடிவம் தந்தவர் கல்கி என்பது தான் மறக்க முடியாத உண்மை..

Exit mobile version