பிறந்தநாள் கொண்டாட்டமும்… பட்டா கத்தி இளைஞர்களும்! மாட்டின் சாணக் கரைசல் விளையாட்டா? விபரீதமா?

கொரோனா காலத்தில் ஆபத்தான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. பிறந்தநாள் என்றால் அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு புத்தாடைகள் அணிந்து, பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களிடம் ஆசி வாங்கி குடும்பத்தோடும், நண்பர்களோடும் அமைதியாக கொண்டாடப்பட்டு வந்த காலம், இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கேளிக்கை விடுதிகள் மற்றும் மதுபானவிடுதிகள் போன்ற இடங்களில் பிறந்தநாள் கொண்டாடினால்தான் கெத்து என நினைக்க தொடங்கிவிட்டனர் சில இளைய தலைமுறையினர். அதுமட்டும் இல்லாமல் பட்டா கத்தி போன்ற கொடூரமான ஆயுதங்களை கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது என பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சில இளைஞர்கள் நடந்துகொள்கின்றனர். இந்த நிலையில், களியக்காவிளை அருகே அதங்கோடு கொக்கிடிச்சி விளை பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் லாகின் என்ற இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் லாகினை மரத்தில் கட்டி வைத்து அவரின் மீது மாட்டின் சாணக் கரைசல், சாம்பல் உட்பட பல பொருட்களை தலை முதல் உடல் முழுவதும் பூசி, பின் அவரை விரட்டி விரட்டி சாம்பலை வீசி மது போதையில் பிறந்த நாள் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

ஜாலி என்ற பெயரில் இது போன்று நடக்கும் விபரீத கொண்டாட்டங்கள் சில நேரங்களில், மூச்சு திணறல் ஏற்பட்டு கண் மூக்கு காது வாய் போன்ற உறுப்புகள் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தீடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம் என்றும் தெரிவிக்கின்றனர். விளையாட்டு விபரீதம் ஆகமல் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version