கேரளாவில் பறவைக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, கேரள எல்லைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் வரும் 15ம் தேதி, புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். இதனையடுத்து அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ளதை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், கேரள எல்லைகளில் உள்ள 26 இடங்களில் மருத்துவ குழுக்கள் ஆய்வு நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.