கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் பீதியால் கோழி இறைச்சி மீது ஆர்வம் குறைந்து மீன் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோழி இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதனால் கோழி இறைச்சி விற்பனை படிப்படியாக குறையத் தொடங்கியது. இது தொடர்பாக கோழி வியாபாரிகள் புகார் செய்ததையடுத்து கோழி இறைச்சி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதே வேளையில், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக செய்திகளும் வெளியாகின. இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கோழிகளை கொண்டு வர தடைவிதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் விளக்கம் அளித்த போதிலும், கோழிக்கறி வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கோழி இறைச்சி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், மீன், நண்டு மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கறிக்கோழி விலை குறைந்ததால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். பல்லடத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கறிக்கோழி உற்பத்தியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்து 800-க்கும் அதிகமான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் மாதம் தோறும் 45 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சமீப காலமாக கறிக்கோழி விற்பனை படிப்படியாக குறைந்து வருகின்றது. பொதுமக்கள் கறிக்கோழிகளை வாங்க தயக்கம் காட்டி வருவதால் இறைச்சி கடை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.