சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வரும் குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகள் பயோ மைனிங் முறையில் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு குப்பை கொட்டப்பட்ட நிலங்கள் முழுவதுமாக மீட்கப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பெருங்குடி, பள்ளிக்கரணை, கொடுங்கையூர், அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம் என பல்வேறு இடங்களில் குப்பை கிடங்குகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த குப்பைக் கிடங்குகளில் தினமும் அதிகளவில் சேரும் குப்பைகளால் காற்று மாசு, சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையை மாற்றி சென்னையை குப்பைகள் இல்லாத, தூய்மையான, சுகாதாரமான நகரமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் குப்பை கிடங்குகளில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்படுவதால் குப்பைகள் முழுவதும் தீர்ந்த பின் அந்த நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். அந்த வகையில் அனகாபுத்தூர் நகராட்சியில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டதால் இது வரை 8 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் அனகாபுத்தூர் நகராட்சி ஆணையர்.
அனகாபுத்தூர் நகராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான 28 ஏக்கர்
நிலத்தில் சுமார் 8 ஏக்கர் முதல் 10 ஏக்கர் நிலம் வரை குப்பை கொட்டப்பட்டு இருந்தது. சுமார் 30 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான குப்பைகள் இங்கு சேர்ந்தன. இதனால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று அபாயத்தால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இவற்றை போக்க அறிவியல் தொழில்நுட்பத்தில் குப்பைகளை விரைந்து பிரித்தெடுக்கக் கூடிய பயோ மைனிங் முறை தற்போது இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இயந்திரங்கள் மூலம் குப்பை கிடங்குகள் முற்றிலுமாக தூர்வாரப்பட்டு, அவை குப்பைகள் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் கொட்டப்படும். பின்னர் கன்வேயர் சுழலும் பொழுது, பிளாஸ்டிக், இரும்பு, உலோகங்கள், மண் மற்றும் மக்கும் குப்பைகள் உள்ளிட்டவை தனித்தனியாக பிரியும். அவ்வாறு பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக், டயர், துணி உள்ளிட்ட மக்காத குப்பைகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு சிமென்ட் தயாரிப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன. கன்வேயர் பெல்ட்டில் இருந்து பிரிக்கப்படும் மக்கும் குப்பைகள் மற்றும் தினமும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆகியவைகளில் இ.எம்.கரைசல் கலந்த தவிடு சேர்க்கப்பட்டு இயந்திரத்தில் அரைக்கப்பட்டு தூளாக்கப்படுகிறது.
இயந்திரம் மூலம் தூய்மையான உரம் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால் குப்பைகள் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இந்த பணியின் போது கிருமி நாசினி, வாசனை திரவியம் தெளித்தல் உள்ளிட்ட பயோ கல்ச்சர் (BIO CULTURE) முறையை பயன்படுத்தி ப்ரி ப்ராசசிங் (PRE PROCESSING) செய்யப்படுவதால் அருகில் வசிக்கும் மக்களுக்கு துர்நாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் முற்றிலும் தவிர்க்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பயோ மைனிங் முறையில் அனகாபுத்தூரில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த ஆறு மாதங்களாக 25 ஆயிரம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை பொதுமக்களுக்கு 2 கிலோ முதல் 5 கிலோ வரை இலவசமாகவும், அதற்கும் அதிகமாக வாங்குபவர்களுக்கு மிகக்குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. குப்பைகளால் ஏற்படக்கூடிய புகை, துர்நாற்றம், நோய் தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.
கடந்த ஆறு மாதங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் 100 சதவீதம் முழுமையாக குப்பைகள் அகற்றப்பட்டு குப்பைகள் கொட்டப்பட்டிருந்த 10 ஏக்கர் உட்பட 28 ஏக்கர் நிலமும் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.