பிச்சை எடுத்து கோடீஸ்வரியான லெபனான் பெண்

லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி பிச்சை எடுப்பதன் மூலம் 6 கோடியே 30 லட்ச ரூபாய்க்கு சமமான தொகையை சேர்த்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

லெபனான் நாட்டில் உள்ள பழமையான நகரம் சிடோன். இங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் வாசலில் ஹஜ் வாபா முகமது அவத் என்ற பெண்மணி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிச்சை எடுத்து வந்தார். இவரை மருத்துவமனையினரும் நன்றாகவே நடத்தினார்கள். இப்படியாக பிச்சை எடுப்பதில் கிடைக்கும் பணத்தை இவர் ஜமால் டிரஸ்ட் பேங்க் என்ற வங்கியில் போட்டு வந்தார்.

ஜமால் டிரஸ்ட் பேங்க் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததால், அந்த வங்கி சமீபத்தில் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் அந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகைகளை வாடிக்கையாளர்களுக்கு அந்நாட்டு ரிசர்வ் வங்கியே காசோலைகளாக வழங்கியது.

இதனால் ஹஜ் வாபா முகமது அவத்துக்கும் இரண்டு காசோலைகள் அனுப்பப்பட்டன. இந்தக் காசோலைகள் மூலம் அவர் பிச்சை எடுத்து வங்கியில் சேர்த்த தொகை 330 கோடி லெபனான் பவுண்டுகள் என்று தெரிய வந்தது, இது இந்திய மதிப்பில் 6 கோடியே 30
லட்சத்திற்குச் சமமான தொகை ஆகும்.

இதனால், இந்த காசோலைகள் மற்றும் ஹஜ் வாபா முகமது அவத்தின் புகைப்படங்கள் உலகெங்கும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தனக்கு பிச்சை போட்டவர்களில் 95 சதவிகிதம் மக்களை விடவும் அதிகமாகப் பணம் வைத்திருந்தும் கூட, ஹஜ் வாபா முகமது அவத் தொடர்ந்து பிச்சை எடுத்ததற்குக் காரணம் அவருக்கு அந்தப் பணத்தை என்ன செய்வது என்றே தெரியாததுதான் என்று கூறப்படுகின்றது.

Exit mobile version