ரூ.4500 கோடி செலவில் சொகுசுக் கப்பல் வாங்கிய பில்கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் சுமார் 4500 கோடி ரூபாய் செலவில் சொகுசுக் கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். முற்றிலும் ஹைட்ரஜனால் இயங்கும் இந்தப் புதிய வகைக் கப்பல் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரபுசாரா எரிபொருளுக்கு சர்வதேச நாடுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ், முழுவதும் ஹைட்ஜனால் இயங்கக் கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் போது   நச்சு வாயுக்கள் எதுவும் வெளியேற்றப்படாததால் இக்கப்பல் சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த பாதுகாப்பானதாக கருதப்படுகிறது

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தி வரும் பில்கேட்ஸ் இதற்கு முன்னர் கலிபோர்னியா நகரில் ஹெலியோஜென் என்ற தொழிற்சாலையை அமைத்துள்ளார்.  இந்த தொழிற்சாலையில் முழுவதும் சூரிய ஒளியை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அமைப்புகள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி சுமார் ஆயிரம் டிகிரி வரை வெப்பத்தை உருவாக்குகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. இந்நிலையில் தற்போது ஹைட்ஜனால் இயங்கும் கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது

அக்வா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலை நெதர்லாந்தை சேர்ந்த  சினோட் என்ற நிறுவனம்  தயாரிக்கிறது. மணிக்கு சுமார் 30 கிமீ வேகத்தில் இயங்கும் இதில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பயணிக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். சுமார் 28 டன் எடையுள்ள ஹைட்ரஜன்  இன்ஜினுக்காக, மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஹைட்ரஜன் சேமிக்கப்படுகிறது.

112 மீட்டர் நீளத்துடன் 5 தளங்களுடன் அமைக்கப்படும் இதில் 2 வி.ஐ.பி தங்கும் அறைகள், பிரமாண்டமான ஒரு உரிமையாளர் காட்சி அரங்கம், அதிகாரி அறைகள் மற்றும் ஒரு கேப்டன் அறை ஆகியவை தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கப்பலில் ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை , யோகா ஸ்டுடியோ, நீச்சல் குளம் அடங்கிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களும் உள்ளன.

சுருள் வடிவில் அடுக்கடுக்காக அமைந்துள்ள படிக்கட்டுகள் காண்போரைக் கவரும் வகையில் உள்ளன. இந்தப் படிக்கட்டுகள் வழியே மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு இறங்கிச் சென்று விடலாம், திரவ ஹைட்ரஜன் உலகம் முழுவதும் பரவலாக கிடைக்காததால் டீசல் என்ஜினும் கூடுதலாக இணைக்கப்படும் என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்டப் பரிசோதனைகள் முடிந்து 2024ம் ஆண்டு இந்த சொகுசுக் கப்பல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version