தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பின்னர், தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு விரைந்து வழங்க உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை 49 சதவிகிதமாக உள்ளதாகவும், நிகழாண்டில் 50 சதவிகித இலக்கை அடைந்துவிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய கல்லூரிகள் திறப்பு, புதிய பாடத்திட்டங்கள் மூலம் வரும் 2035 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை 65 சதவிகிதத்தை எட்டிவிடும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.
தேசிய அளவில் ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என உள்ள நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கல்வி கொள்கையின்படி, பி.எட்., பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக மாற்றியுள்ளதை வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அன்பழகன், இதன் மூலம் மாணவர்கள் விரைவில் படிப்பை முடித்து ஆசிரியர் பணிக்கு செல்ல வழி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 587 கல்லூரிகளில் 53 கல்லூரிகளுக்கு மட்டுமே தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தொடர அனுமதிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மாநில மொழிகளில் கல்வி பயில வாய்ப்பு வழங்கவேண்டும் என தேசிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.