சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, வாடிக்கையாளரின் கட்டளைப்படி இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்துள்ளனர். கம்ப்யூட்டர் சிப் மூலம் இயங்கும் இந்த மிதிவண்டியைப் பற்றிய தகவல்கள்
டெஸ்லா, கூகுள் போன்ற பல்வேறு நிறுவனங்கள், தானியங்கி கார்களைத் தயாரிப்பதில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, யாரும் அமராமல் தானாகவே இயங்கும் மிதிவண்டியை உருவாக்கியுள்ளது.
பீஜிங் நகரில் உள்ள சிங்ஹுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவால் உருவாக்கப்பட்ட இந்த தானியங்கி மிதிவண்டி, டியான்ஜிக் (Tiangic) எனப்படும் கம்ப்யூட்டர் சிப் மூலம் இயங்குகிறது. தானாகவே சமநிலைப்படுத்திக்கொள்ளும் இந்த மிதிவண்டி, தடைகளைத் தெளிவாகக் கண்டறிவது, நமது கட்டளையை ஏற்று திரும்புவது போன்ற திறன்களை கொண்டுள்ளது.
தானியங்கி மிதிவண்டி என்பது முதல் முறை இல்லையென்றாலும், இதில் பயன்படுத்தியுள்ள கம்ப்யூட்டர் சிப் ரொம்பவே ஸ்பெஷல். இதன் செயல்பாடு, அனைவரையும் வியக்கவைத்திருக்கிறது. இந்த டியான்ஜிக் கம்ப்யூட்டர் சிப், மெஷின் Learning உதவியுடன் மனித மூளை போன்ற ஒரு நியூரல் நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம், இந்த சிப் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை தனித்தனியே செயல்படுத்த முடிகிறது.
இந்த கம்ப்யூட்டர் சிப், நியூரல் நெட்வொர்க்குகளுக்கு இடையேயான எளிதான தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதால், மிதிவண்டி அதன் பாதையில் உள்ள தடைகளைத் தவிர்த்து, வாய்வழி கட்டளைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதுடன், சைக்கிள் சமநிலையைப் பாதுகாக்க முடிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் கணினியியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, “ ஒரு சிப்பைப் பயன்படுத்தி, ஆளில்லா மிதிவண்டி அமைப்பில், நேர்த்தியான வழிமுறைகள் மற்றும் மாதிரிகளை ஒரே நேரத்தில் செயல் விளக்கமளிக்க தங்களால் முடியும் என்றும், நிகழ்நேரத் தடை கண்டறிதல், தவிர்த்தல், குரல் கட்டுப்பாடு மற்றும் சமநிலை கட்டுப்பாடு ஆகியவற்றையும் இதனால் உணர முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.