மேட்டூர் அருகே கல்லூரி மாணவர்கள் குறைந்த செலவில் தண்ணீரில் மிதந்து செல்லும் மிதிவண்டியை தயாரித்து அசத்தியுள்ளனர்.
காவேரிபுரம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் தமிழ்குமரன், குணசேகரன். சிறு வயதில் இருந்தே நண்பார்களான இவர்கள், தனியார் கல்லூரியில் வெவ்வேறு பாடப்பிரிவில் பயின்று வருகின்றனர். இருவரும் ஓய்வு நேரங்களில் தங்களது கிராமத்தை ஒட்டியுள்ள மேட்டூர் அணைக்குச் சென்று குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தண்ணீரில் மிதக்கும் மிதிவண்டியை தயாரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். தமிழ்குமரனின் தந்தை வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில் செய்து வருகிறார். இதேபோல் குணசேகரனின் தந்தை மிதிவண்டி பழுது பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். 6 அடி நீளம் கொண்ட பிவிசி குழாய் மூலமாக தண்ணீரில் மிதக்கும் வண்டியை தயாரித்தனர். 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரான மிதிவண்டி மூலம் தண்ணீரில் எளிதாக பயணிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம், தண்ணீரில் தத்தளிப்பவர்களை எளிதில் மீட்க முடியும் என்று அவர்கள் கூறினர்.
மாணவர்களின் இந்த எளிய கண்டுபிடிப்பிற்கு மேட்டூர் சுற்று வட்டார பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தரை வழிப்பயணத்தை போலவே, நீர் வழிப் பயணத்தையும் எளிமையாக்கும் விதமாக இந்த மிதிவண்டி அமையுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.