பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பவானி ஆறு மற்றும் மாயாறு ஆகிய 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியிலிருந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 98.06 அடியாகவும், நீர் இருப்பு 27.2 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய்க்கு ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால் 3 நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர் வரத்து அதிகரிப்பால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.