65-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை

ஆசியாவின் மிகப் பெரிய மண் அணையான பவானிசாகர் அணை இன்று 65 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணையின் கட்டுமானப் பணிகள் 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி நிறைவுபெற்று. அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசன பரப்பு கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன், மற்றும் கீழ்பவானி வாய்க்கால் என நான்கு வாய்க்காலுக்கு நீர் வரத்து வருகிறது.

வாய்க்கால்கள் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் விடப்படும் தண்ணீர் காவிரியில் கலந்து தஞ்சை மாவட்டங்களுக்கும் பாசன வசதி பெற்று, பின்னர் சென்னை வீராணம் ஏரியில் கலக்கிறது. இதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீருக்கும் இந்த பவானிசாகர் அணை நீர் செல்கிறது.

இன்று 65 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பவானிசாகர் அணை, இதுவரை 17 முறை நிரம்பியுள்ளது. இதில் மூன்று முறை முழு கொள்ளளவை எட்டி அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

 

Exit mobile version