2007ம் ஆண்டிற்குப் பின், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, கடந்த அக்டோபர் 22ம் தேதி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அக்டோபர் மாத இறுதி வரை 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால், உபரிநீர், மேல்மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் 105 அடி வரை நீர்தேக்கலாம் என்பதால், உபரி நீர் வெளியேற்றம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நிறுத்தப்பட்டது. இன்று காலை அணை நீர்மட்டம் 102 புள்ளி 34 அடியாகவும், நீர் இருப்பு 30 புள்ளி 5 டிஎம்சி-யாகவும் உள்ளது. பாசனத்திற்காக பவானி ஆற்றில் 600 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் ஆயிரத்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளதால் 3 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.