ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் உள்ள ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் கிளை வாய்க்காலின் இரட்டைப்படை மதகுகள் வழியாக வினாடிக்கு 2300 கன அடி நீர் திறக்கப்பட்டு சாகுபடி நடைபெற்றது.இந்த நிலையில் இரண்டாம் போக சாகுபடிக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில் பவானிசாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. ஏப்ரல் 30 ம் தேதி வரையிலான கால இடைவெளியில் மொத்தம் 67 நாட்களுக்கு விநாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்.இதையடுத்து தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.