`ஈழத்தமிழர்கள் மனதில் நினைவுகொள்ளப்படுவீர்கள்’ – விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்!

முத்தையா முரளிதரனாக நடிப்பைத் தவிர்த்தால், ஈழத்தமிழர்கள் மனதிலும், தனது மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என நடிகர் விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தில், ஈழத்தமிழ் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் முத்தையா முரளிதரன் என்றும், சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் என்றும் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். விளையாட்டு வீரராக என்ன தான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்ட போது சிரித்து மகிழ்பவர், என்ன சாதித்து என்ன பயன்? என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தங்களை பொருத்தவரை முத்தையா முரளிதரன் நம்பிக்கை துரோகி தான் எனக் குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலங்காலமாக உங்கள் முகமாக வெறுப்புடன் மக்கள் பார்க்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா என பாருங்கள் என்று பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கத்தை அறிந்ததாகவும், இன துரோகிக்கு துணை போகும் தங்களை நினைத்து கோபப்படுவதா?, இல்லை தங்களது அறியாமையை கண்டு சிரிப்பதா? என தெரியவில்லை என பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை பயன்படுத்தி கொள்ள விரும்பினால் அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டு கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு அல்லது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை உலகரங்கில் எடுக்க வந்தால் ஒட்டுமொத்த தமிழர்களும், திரைத்துறையினரும் இலவசமாக பணியாற்ற காத்திருப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Exit mobile version