திமுக ஆட்சியில் இருந்ததை போல், வாக்குகளை எண்ணாமலேயே தேர்தல் முடிவுகளை சொல்லும் நடைமுறை தற்போது இல்லை என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதையும், யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி முதன்மை மாநிலமாக இருப்பதையும் குறிப்பிட்டார். மத்திய அரசு எந்த பாகுபாடும் பார்க்காமல் மாநிலங்களை தேர்ந்தெடுத்து உள்ளதற்கு இதுவே உதாரணம் என்றார். மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் விருதுகளை குவிப்பதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடந்ததாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் 2006-ல் உருட்டுக்கட்டை தேர்தல் நடைபெற்றதாக விமர்சித்தார்.